ம.பி.: குதிரை ஊர்வலத்துக்காக தலித் மணமகன் மீது தாக்குதல்

ம.பி.: குதிரை ஊர்வலத்துக்காக தலித் மணமகன் மீது தாக்குதல்
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் குதிரை மீது ஊர்வலமாக சென்றதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய உயர் சாதியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் நெக்ரன் மாவட்டத்தில் தலித் சமுகத்தைச் சேர்ந்த பவன் என்றவருக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மணமகன் ஊர்வலத்தில் குதிரையில் பவன் அழைத்து வரப்பட்டார்.

இந்த ஊர்வலத்துக்கு அந்தப் பகுதியின் உயர் சாதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து, மணமகன் மற்றும் விழாவில் கலந்துகொண்ட உறவினர்கள் மீது கற்களை வீசினர். பின்னர் வன்முறையில் ஈடுபட்டு, குதிரையை அழைத்து சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, உறவினர்கள் வேறொரு குதிரைக்கு ஏற்பாடு செய்து போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலத்தை நடத்தினர். தாக்குதலில் இருந்து தப்பிக்க மணமகனுக்கு போலீஸார் ஹெல்மெட் தந்து உதவினர். ஊர்வலத்தால் கலவரம் ஏற்படாது இருக்க பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

பாதுகாப்பையும் மீறி, ஹெல்மட் அணிந்து சென்ற மணமகன் மீது கற்களை வீசியும் ஊர்வலத்தில் பிரச்சினை செய்தும் உயர் சாதியை சேர்ந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மணமகன் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பவனின் தந்தை புராலால் அளித்த புகாரின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலத்தில் இடையூறு செய்ததாக மொத்தம் 72 பேருக்கு எதிராக தாழ்த்தப்பட்ட பிரிவினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in