

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் செல்வாக்கை முறியடிக்க முலாயம் சிங் முயற்சித்து வருகிறார். இதற்காக தனது தொகுதியான மெயின்புரியுடன் சேர்த்து ஆசம்கரிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
உ.பி.யில் நான்கு கட்டமாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பாஜக என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் மாற்று அணியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர் முலாயம்சிங். இதற்கு உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் பெரும்பாலானவைகளில் அவரது கட்சி வெற்றிபெற வேண்டும்.
இந்நிலையில், 2004 தேர்தலில் உபியில் பத்து தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, உபியின் கிழக்குப் பகுதியிலுள்ள 18 தொகுதிகளைக் குறிவைத்து மோடியை வாரணாசி தொகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில் மோடிக்கு ஆதரவான வாக்குகள் கிடைப்பதைத் தடுக்க முலாயம்சிங் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தாம் வழக்கமாக போட்டியிடும் மெயின்புரியுடன் சேர்த்து ஆசம்கரிலும் (2 தொகுதிகளில்) போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து சமாஜ்வாதி பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் தி இந்துவிடம் கூறுகையில், ‘நேதாஜி ஆசம்கரில் போட்டியிட வேண்டும் என அதன் பெரும்பாலான வாக்காளர்கள் கோரியுள்ளனர். கட்சி மேலிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறது’ என்றார்.
டெல்லியின் ஜாமியா நகரில் நடந்த பட்லா ஹவுஸ் என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் என சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆசம்கரைச் சேர்ந்த இளைஞர்கள். இது டெல்லி போலீசார் நடத்திய போலி என்கவுண்ட்டர் என முலாயம்சிங் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வாரணாசியில் மோடியை எதிர்த்து கௌமி ஏக்தா தளம் கட்சியின் தலைவர் முக்தார் அன்சாரி மீண்டும் போட்டியிட விரும்புகிறார். உபியின் கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற அன்சாரி, தனது கட்சியின் ஒரே ஒரு சட்டசபை உறுப்பினராக (மௌவ் தொகுதி) இருக்கிறார். இவர், கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் முரளி மனோகர் ஜோஷிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு, 17,211 வாக்குகளில் அடுத்த இடம் பெற்று தோல்வி அடைந்தவர்.
உபியில் தற்போது சமாஜ்வாதிக்கு 23, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜுக்கு 20, பாஜகவிற்கு 10, ராஷ்டிரிய லோக்தளத்திற்கு 5 மற்றும் சுயேச்சையாக ஒரு எம்பி உள்ளனர். இதில் அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதிக்கு அதன் கிழக்குப் பகுதியிலுள்ள 18 மக்களைவை தொகுதிகளில் ஆறும், பாஜகவிற்கு 4 எம்பிக்களும் உள்ளனர்.