ஓராண்டில் ஒன்றும் சாதிக்கவில்லை: பாஜக கூட்டத்தில் எம்.பி.யின் கொந்தளிப்பால் பரபரப்பு

ஓராண்டில் ஒன்றும் சாதிக்கவில்லை: பாஜக கூட்டத்தில் எம்.பி.யின் கொந்தளிப்பால் பரபரப்பு
Updated on
1 min read

பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் புதன்கிழமை பால்லியா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. பரத் சிங், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த ஓராண்டில் எதையும் சாதிக்கவில்லை என்று பெரிய குண்டு ஒன்றை தூக்கிப் போட்டார்.

இதில் பாஜக தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் ஏற்பட்ட தர்மசங்கடம் என்னவெனில், பரத் சிங்கின் இந்த விமர்சனத்துக்கு உத்தரப் பிரதேச மாநில எம்.பி.க்கள் பெஞ்சைத் தட்டி ஆதரவு தெரிவித்ததே.

சாதனைகள் பற்றி மத்திய அரசு பேசி வருகிறது, ஆனால் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என்/று பாஜக எம்.பி. பரத் சிங் விமர்சனம் வைத்தார்.

மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, அருண் ஜேட்லி, ஆனந்த் குமார் மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்புச் செயலர் ராம்லால் ஆகியோர், எம்.பி.க்கள் இந்த ஆட்சியின் அருமை பெருமைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து பரத் சிங் இவ்வாறு தெரிவித்தது பாஜக பெரும் தலைகளை மக்களவையில் நெளிய வைத்துள்ளது.

பரத் சிங் கூறியது என்னவெனில், ‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் கிராமின் சதக் யோஜ்னாவின் கீழ் ஒரு அங்குலம் கூட சாலைகள் கட்டமைக்கப்படவில்லை’ என்றார்.

ஜி.எஸ்.டி. மசோதா, மற்றும் வங்கதேசத்துடனான நில எல்லை உடன்படிக்கை குறித்த மசோதா ஆகியவை நிறைவேறவிருப்பதால் அவையில் இருக்குமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்ட போது பாஜக எம்.பி. எழுந்து, “எங்களுக்கும் பேச வாய்ப்பளியுங்கள்” என்று கூறி, “கோரிக்கைகள் உ.பி. அமைச்சர்களாலும் கேட்கப்படுவதில்லை, மத்தியிலும் இதே நிலைமைதான்” என்றார்.

பாஜக-வின் சக எம்.பி.க்களும் பரத் சிங் கருத்துக்கு ஆதரவு:

நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூறுவதையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்ற பரத் சிங்கின் கோரிக்கை நியாயமானதே என்று சில பாஜக எம்.பி.க்களும் தெரிவித்தனர்.

டெல்லியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறும்போது, “இந்தப் பிரச்சினைகள் எழும் காரணம் என்னவெனில், மாநிலங்களில் மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் இருப்பதில்லை என்பதே” என்றார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் பருவநிலை தவறி பெயத மழை காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதில் தாமதம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி நிலவி வருவதால், இந்த ஓராண்டு பாஜக ஆட்சியின் ‘சாதனைகளை’ மக்களிடம் எடுத்துச் செல்ல அக்கட்சி எம்.பி.க்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக எம்.பி. பரத் சிங், சாதனைகள் இல்லை என்று குண்டைத் தூக்கி போட்டிருப்பது ஆட்சியாளர்களிடையே தர்மசங்கடத்தை ஏறப்டுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in