

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பு பிரதிநிதிகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், நிலம் கையகப்படுத்த விவசாயிகள் ஒப்புதல் கட்டாயம் என்ற பிரிவை சேர்க்க, அருண் ஜேட்லியிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், விவசாயிகளின் கவலைகளை முழுதும் பரிசீலித்து அவர்களது பரிந்துரைகளையும் உள்ளடக்கி, அவர்கள் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் முன்னாள் பாஜக கிசான் மோர்ச்சா தலைவரும், டிடி கிசான் சானலின் ஆலோசகருமான நரேஷ் சிரோஹி கூறும்போது, "30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது கவலைகளை அருண் ஜேட்லியிடம் முன்வைத்தனர்.
மேலும், அருண் ஜேட்லி 5 அல்லது 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து விவசாயிகளின் பரிந்துரைகளை கோருமாறு கூறியுள்ளதாகவும், நிலச் சட்டம் தொடர்பான எதிர்கால விவாதங்களின்போது பரிந்துரைகள் பற்றி எடுத்து வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறான சந்திப்புகள் நிறைய நடைபெறும் என்றும், அரசின் நோக்கம் விவசாயிகள் நலன் சார்ந்ததே என்றும் அருண் ஜேட்லி அவர்களுக்கு உறுதி அளித்தார்.
விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. விவசாயிகள் விருப்பத்தை அறிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்றார்.
இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விவசாய அமைப்புகள் அருண் ஜேட்லியிடம் மனுக்களை அளித்தனர். இதில் குறிப்பாக பாரதிய கிசான் யூனியன் தனது மனுவில் புதிய நிலச் சட்டம் விவசாயிகளின் நீண்ட கால போராட்டங்கள் மீதான ஒரு 'ஜோக்' என்றும், 2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிலச்சட்டத்துக்கு ஆதரவாகவும் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் புதிய நிலச் சட்டம் குறித்து ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன என்றும், அதில் தெளிவு இல்லை என்றும் பெரும்பாலான விவசாய அமைப்புகள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளன.
மேலும், நிலம் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதல் தேவை என்பதை ஏறக்குறைய அனைத்து விவசாய அமைப்புகளும் வலியுறுத்தியதாகவே தெரிகிறது.
மத்திய அரசு பின்வாங்காது: மத்திய அமைச்சர் கெலாட்
முன்னதாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்காது என்று மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறினார்.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் என்ற இடத்தில் இதுகுறித்து கெலாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டக்குழுவின் ஆய்வுக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கத்தில் அளிக்கவுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். என்றாலும் அதில் மாற்றங்கள் செய்வது தொடர்பான ஆலோசனைகளை பரிசீலிப்போம்" என்றார் கெலாட்.