

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ், விரைவில் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு இந்திய தூதரான அப்துல் பாஸித் தெரிவித்தார்.
இது குறித்து உ.பி.யின் தலைநகரான லக்னோ வந்த பாஸித், முதல்வரின் அரசு வீட்டில் அகிலேஷுடன் நடத்திய சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உபிக்கும் பாகிஸ்தானுக்கும் பல விஷயங்களில் கலாச்சார ஒற்றுமை உள்ளது. நானும் இங்கு எனது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறேன். எங்கள் அரசின் அழைப்பை முதல்வரிடம் தெரிவித்த போது அதை ஏற்று வருவதாக உறுதி கூறினார்' எனத் தெரிவித்தார்.
சுதந்திரத்துக்கு சற்று முன்பாக நம் நாட்டில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உதயமானது. அப்போது பாகிஸ்தானில் குடியேறியவர்களில் உ.பியைச் சேர்ந்த முஸ்லிம்கள் அதிகம். அவர்களில் பலர் இன்னும் உ.பியில் உள்ள தம் சொந்தங்களுடன் நேரில் சந்தித்து உறவாட விரும்புகின்றனர்.
இன்னும் பலர் தம் விட்டுப் போன சொந்தங்களுடன் திருமண உறவுகளை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இதனால், உ.பி முதல்வரின் பாகிஸ்தான் விஜயம் இம் மாநிலத்தில் இருந்து குடியேறிய பாகிஸ்தான்வாசிகளுக்கு பல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகிலேஷ், நீண்ட வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் முதலாவது உ.பி முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.