

பஞ்சாப் மாநிலம் மோகாவில் ஓடும் பஸ்சில் மானபங்கப்படுத்தப்பட்டு சாலையில் வீசப்பட்ட சிறுமி பலியான சம்பவம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.
இன்று காலை அவை கூடியதும் காங்கிரஸ் எம்.பி. அம்பிகா சோனி மோகா சர்ச்சையைக் கிளப்பினார். பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகவும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், இடதுசாரி கட்சியினரும் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும் என்றனர்.
இதற்கு அகாலிதள உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு இடையே வாதம் வலுத்தது. இதனையடுத்து அவை துணைத் தலைவர் குரியன் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடிய போது, காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசினார். அவர் கூறும்போது, மோகா சம்பவத்துக்கு மாநிலங்களவை கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த அவை துணைத் தலைவர் குரியன், "மோகா சம்பவத்தைப் பற்றி விவாதிக்க மாநிலங்களவையில் முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, சில அவசர விவகாரங்களை பிரச்சினையின் ஆழம் அறிந்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவை அனுமதிக்க வேண்டும் எனக் கூறினார்.
அதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி, மோகா சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாயாவதி, பஞ்சாப் மாநிலத்தில் பெண்களின் உயிரும், உடமையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றார். தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மோகா சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.