

பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணத்தின்போது டீஸ்தா நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் மம்தாவின் எதிர்ப்பு காரணமாக அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.
டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வங்கதேசத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனை எதிர்கொள்வதற்கு டீஸ்தா நதிநீர் வங்கதேசத்துக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நதிநீர் பங்கீடு குறித்த மேற்கண்ட ஒப்பந்தம் மோடி பயணத்தின்போது நிறைவேறும் என்று நம்புவதாக வங்கதேசம் கூறியுள்ளது. அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:
வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணமாக ஜூன் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அவருடன் முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்ல முடிவாகியுள்ளது. இந்தப் பயணம் இரண்டு வங்கங்களுக்கும் (மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம்) இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும் என்று நம்புகிறோம்.
டீஸ்தா நதிநீர் பங்கீட்டுக்கு மம்தா சம்மதம் தெரிவித்தாரா இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதனால் இதில் என்னால் கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.