ஜனதா கட்சிகள் இணைந்ததால் பிஹாரில் இருமுனைப் போட்டி

ஜனதா கட்சிகள் இணைந்ததால் பிஹாரில் இருமுனைப் போட்டி
Updated on
2 min read

ஜனதா கட்சிகள் இணைந்ததால் நவம்பரில் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் ஜனதா பரிவார் கூட்டணிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று முறையாக இங்கு மும்முனைப் போட்டி நிலவியது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முந்தைய ஜனதா தலைவர்களால் உருவாக்கப்பட்ட 6 கட்சிகள் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி இணைந்தன.

இதில் குறிப்பாக, பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஒன்றாக இணைந்தன. இதனால் வரும் பிஹார் தேர்தலில் ஜனதா மற்றும் பாஜக கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஏற்கெனவே தனது ஆதரவை அளித்துள்ளது. இவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருப்பதால், இந்தமுறை மும்முனைப்போட்டி இருக்காது என கருதப்படுகிறது. என்றாலும் இவர்களுக்கு இடையே தொகுதிப் பங்கீடு மிகவும் சிக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் மத்திய இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் லோக் சம்தா கட்சியும் இடம்பெற்றுள்ளன. புதிய கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் பாஜகவுடன் செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜகவுக்கு 143 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட வேண்டும் என அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. மீதம் உள்ள 100 தொகுதிகளில் பாஸ்வான், குஷ்வாஹா, மாஞ்சி ஆகிய மூவரும் பிரித்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை எனில் 100-ல் 10 தொகுதிகளை மட்டும் விட்டுக்கொடுப்பது என இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாஜகவோ தனிப் பெரும்பான்மைக்கான 122 தொகுதிகளை வெல்லும் வகையில் அதிகபட்ச தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது.

இதேபோல், ஜனதா கூட்டணியில் லாலு பிரசாத்தும் நிதிஷ்குமாரும் தங்களுக்கு தலா 100 தொகுதிகளை எடுத்துக்கொண்டு மீதியுள்ள 43-ஐ தனக்கு விட்டுத்தர வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய விரும்பினால் லாலு, நிதிஷ் ஆகியோர் தங்கள் பங்கில் தலா 10 தொகுதிகளை அவர்களுக்கு தரவேண்டும் எனவும் காங்கிரஸ் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் லாலுவும், நிதிஷும் தங்களிடையே தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றாலும் காங்கிரஸுக்கு வெறும் 25 தொகுதிகளை மட்டுமே தர விரும்புகின்றனர்.

இதனால் இரு கூட்டணிகளிலும் தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹாரில் கடந்த 2010-ல் பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - லோக்ஜன சக்தி கூட்டணி ஆகியவற்றுடன் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதனால் மும்முனைப் போட்டி நிலவியது.

இதற்குமுன் பிப்ரவரி 2005-ல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிட்டது. இந்த மும்முனைப் போட்டியில் தொங்கு சட்டசபை ஏற்பட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு நவம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதிலும் நிலவிய மும்முனைப் போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in