

டெல்லியில் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் தருவதாக கூறி அவரது நேர்மையை அர்விந்த் கேஜ்ரிவாலின் மகள் சோதித்துள்ளார். இதனை அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால், நகரின் புறநகர் பகுதியான புராரி என்ற இடத்தில் ஆட்டோ டிரைவர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது கேஜ்ரிவால், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறைந்துள்ளது. இந்த முறைகேடு முற்றிலும் நின்றபாடில்லை. என்றாலும் 70 80 சதவீதம் குறைந்துள்ளது” என்று கூறியவர் தனது மகளின் அனுபவத்தை கூறி இதை விளக்க முற் பட்டார்.
“எனது மகள் ஹர்ஷிதா ஓட்டுநர் உரிமத்துக்கான பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றார். முதல்வரின் மகள் என்று தன்னை காட்டிக் கொள்ளாமல் வரிசையில் காத்திருந்து தொடர்புடைய அதிகாரியை சந்தித்த அவர், சான்றிதழ்களில் ஒன்றை கொண்டுவரவில்லை என்றார். இதற்கு அந்த அதிகாரி உரிமம் தர மறுத்துவிட்டார்.
‘உரிமம் உடனடியாக தேவைப்படுகிறது. பணம் எவ்வளவு வேண்டு மானாலும் தருகிறேன்’ என்று எனது மகள் கூறிய பிறகும் அதிகாரி உடன்பட மறுத்துவிட்டார். பிறகு உரிய சான்றிதழை காட்டிய பிறகு அந்த அதிகாரி உரிமம் தர முன்வந்தார். சான்றிதழில் தந்தையின் பெயரை கண்ட அந்த அதிகாரி, “முதல்வரின் மகளா?” என கேட்டறிந்தார். பிறகு ஒட்டுமொத்த அலுவலகமும் எனது மகளுக்கு உரிமம் தரும் பணியில் ஈடுபட்டதை நான் சொல்லத் தேவையில்லை.
இந்த சம்பவம் டெல்லியில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. ஆட்டோ ஓட்டுநர்களும் இதை என்னிடம் தெரிவிக்கின்றனர். நேர்மையற்ற அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். நேர்மையான அதிகாரிகள் துணிச்சலுடன் தங்கள் பணிகள் செய்துவருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் நேர்மை யுடன் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். நீங்கள் நேர்மையாக நடந்துகொண்டால் ஆட்டோ கட்டண உயர்வுக்காக நான் உங்கள் பக்கம் நிற்பேன். உங்கள் குழந்தைகளின் நலனை நான் பார்த்துக்கொள்வேன்” என்றார்.