குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த பெண், காதலரின் மரண தண்டனை நிறுத்தம்

குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த பெண், காதலரின் மரண தண்டனை நிறுத்தம்
Updated on
1 min read

காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த வழக்கில் பெண் மற்றும் அவரது காதலருக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோவா பகுதியைச் சேர்ந்தவர் சப்னம். இவர் சலீம் என்பவரைக் காதலித்தார். அவரை திருமணம் செய்துகொள்ள சப்னமின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி தனது குடும்பத்தினரை காதலர் சலீமின் உதவியுடன் கொலை செய்தார் சப்னம். தனது தந்தை சவுகத் அலி (60), தாய் ஹாஸ்மி (55), சகோதரன் அனீஸ் அகமது கான் (35), அவரது மனைவி அஞ்சும் (25), மற்றொரு சகோதரர் ரஷீத் (22), சிறுமி ரபியா (14), அனீஷின் பத்து மாத குழந்தை அர்ஷ் ஆகியோருக்கு மயக்க மருந்து கொடுத்தார் சப்னம்.

பின்னர் இவர்களில் 6 பேரை சலீம் கோடாரியால் வெட்டிக் கொன்றார். 10 மாதக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

இதுதொடர்பான வழக்கில் சலீம், சப்னம் இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் கடந்த 2010ல் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் அலாகாபாத் உயர் நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கடந்த 15-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் இருவருக்கும் விதிக்கப் பட்ட மரண தண்டனையை உறுதி செய்தார். கடந்த 21-ம் தேதி மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்கக் கோரி உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, யு.யு. லலித் ஆகியோரடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை முறையீட்டைக் கேட்க வேண்டும் என சப்னம் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in