

மத்திய அரசின் என்.ஜி.ஓ.க்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு இலக்கான சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீஸ் தனது 2 வங்கிக் கணக்குகளை நடத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அயல்நாட்டு நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை கிரீன்பீஸ் அமைப்பு மீறியதாக மத்திய அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அதாவது தனது அயல்நாட்டு அன்பளிப்பு நிதியை உள்நாட்டு நிதியுடன் இணைக்கிறது கிரீன்பீஸ், இது சட்டத்துக்கு புறம்பானது என்று மத்திய அரசு வாதாடியது.
இதனையடுத்து தங்கள் உரிமத்தை ரத்து செய்ததை எதிர்த்தும், கணக்குகளை மத்திய அரசு முடக்கியதால் உடனடியாக இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
அந்த மனுவின் மீதான உத்தரவில்தான் புதன்கிழமையன்று டெல்லி உயர் நீதிமன்றம் 2 வங்கிக் கணக்குகளை அந்த அமைப்பு நடத்திக் கொள்ளலாம் என்றும் நிரந்தர வைப்பு நிதியையும் பயன்படுத்தலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கிரீன்பீஸ் இயக்கத்தின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்த மத்திய அரசு, அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு, அயல்நாட்டு அன்பளிப்பு என்று நிதிகளை பெறவும் தடை விதித்தது, மேலும் ஏன் கிரீன்பீஸ் இயக்கத்தை நிரந்தரமாக தடை செய்யக்கூடாது என்றும் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.