Last Updated : 08 May, 2015 07:57 AM

 

Published : 08 May 2015 07:57 AM
Last Updated : 08 May 2015 07:57 AM

சிறார் நீதி திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

சிறார் நீதி திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்கள் கொடூர குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களை பெரியவர்களாக கருதி விசாரிக்க இந்த மசோதா வகைசெய்கிறது.

இப்போதைய சட்டத்தின்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறார் என்ற வரம்புக்குள் வருவதால் அவர்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டாலும் சிறை தண்டனை விதிக்கப்படுவது இல்லை. சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றனர்.

கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பிஸியோதெரபிஸ்ட் மாணவி, 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 வயது இளைஞர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மற்றவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை பெரியவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதன்பேரில் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) மசோதா 2014 மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா ஏற்கெனவே அமலில் உள்ள 2000-ம் ஆண்டு சிறார் நீதி பராமரிப்பு சட்டத்துக்கு மாற்றாக அமையும்.

புதிய மசோதாவில் சிறிய குற்றங்கள், மோசமான குற்றங்கள், கொடிய குற்றங்கள் எவை எவை என பிரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2014-ல் இந்த மசோதாவை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மக்களவையில் அறிமுகம் செய்தது. இம் மசோதா பின்னர் பரிசீலனைக்காக நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் குழு, சிறார் என்றால் அவர்கள் வயது 18 என சட்டபூர்வமாக விளக்கம் தரலாம் என்று பரிந்துரைத்தது.

எனினும் இந்த பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு, கொடூர குற்றம் புரிந்தவர் 16 வயதுடையவராக இருந்தால் அவர்களை பெரியவர்களாக கருதி விசாரிக்கலாம் என அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x