

தன்னார்வ அமைப்புகளுக்கு (என்.ஜி.ஓ) எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, இது குறித்து விவரிக்கையில், “என்.ஜி.ஓ. அமைப்புகள் மீதான இத்தகைய நடவடிக்கைகள் சிவில் சமூகத்தில் ‘சில்லிடும் விளைவுகளை’ ஏற்படுத்தும் என்றார்.
வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வ அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையாக, மத்திய அரசு கடந்த மாதம் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறியதாக சுமார் 9,000 அமைப்புகளின் உரிமத்தை ரத்து செய்தது. சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான கிரீன் பீஸ் அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுன்டேஷன் என்ற அமைப்பும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள எந்தவொரு தன்னார்வ அமைப்புக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதியை வங்கிகள் தனது அனுமதியின்றி விடுவிக்க கூடாது எனவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கிரீன்பீஸ் இந்தியா அமைப்புக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற உடனடி தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2 வாரங்களில் என்.ஜி.ஓ.க்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் குறித்து 4-வது முறையாக அமெரிக்கா தனது கவலைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஜனநாயக சமுதாயத்தில் அமைதி வழியில் வாதிடவும், அரசிடம் கேள்வி கேட்கவும், சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் குடிமக்களுக்கு மறுக்க முடியாத உரிமை உள்ளது. இது தேசப் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாக ஆகாது.
இந்தியாவில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சமீப காலமாக வெளியாகும் தகவல்களால் நான் கவலை அடைந்தேன். ஏனெனில், நமது இரு நாடுகளின் பாரம்பரிய ஜனநாயகத்துக்கு துடிப்பான சமுதாயம் மிக முக்கியம். தன்னார்வ அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கவலை அடைந்தேன்.
பொதுநலன் தொடர்பான பிரச்சினைகளில் சுதந்திர சமுதாயம் தொடர்ச்சியான ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடவேண்டும். அரசியலுக்கு பொருந்துகிறது என்பதற்காக கடுமையான கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது. பதில்களை நாம் விரும்பவில்லை என்பதற்காக விவாதங்களை தவிர்க்க முடியாது.
விவாதங்கள் பல்வேறு தரப்பினரரும் ஈடுபடும்போது, ஆட்சேபகரமான கருத்துகள் வருவதும் உண்மை. அமைதி வழியில் மாற்றத்தை விரும்பும் நடவடிக்கை அரசுக்கு எதிரானது அல்ல. இது அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும். தேசப் பாதுகாப்பை வலுப்படுத்துமே தவிர வலுவிழக்கச் செய்யாது” என்றார்.