

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர் பாக ஸ்வீடன் பத்திரிகையில் வெளியான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பேட்டிக்கும், அவரது ஸ்வீடன் பயணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 31-ம் தேதி ஸ்வீடன் மற்றும் பெலாரஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், ஸ்வீடன் பத்திரிகையொன்றில் பிரணாப் முகர்ஜியின் பேட்டி வெளி யானது. அதில், போபர்ஸ் ஊழல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரணாப் பதில் அளித்திருந்தார்.
போபர்ஸ் பேரம் ஊழல் அல்ல என்றும், அது விளம்பர தந்திரம் என்றும் தெரிவித்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போபர்ஸ் தொடர்பான கேள்வி களை பிரசுரிக்கக்கூடாது என இந்தியத் தூதர் ஒருவர் எச்சரித்த தாக அந்த ஊடகம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலை வரின் பெலாரஸ், ஸ்வீடன் பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது, வெளியுறவு செயலாளர் (மேற்கு) நவ்தேஜ் சர்னா கூறும்போது, “போபர்ஸ் பற்றிய பிரணாபின் பேட்டி குறித்த கருத்துகள் ஊடக தந்திரம்.
ஸ்வீடன் மற்றும் பெலாரஸுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் முதன்முறையாக செல்லப்போவது உறுதி. அந்தப் பேட்டிக்கும் ஸ்வீடன் பயணத்துக்கும் தொடர்பில்லை” என்றார்.
வெளியுறவு அமைச்சர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இந்தியத் தூதர் மிரட்டிய சம்பவம் நடைபெறவில்லை” என்றார்.