

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தொடர்ந்து வதந்தி பரவுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பெங்களூருவில் குவிந்து வருகின்றனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த 27-ம் தேதி மூன்று பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'பவானி சிங்கின் நியமனம் செல்லாது' என உத்தரவிட்டனர். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பு, கர்நாடக அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும் என உத்தரவிட்டது. எனவே திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் (81 பக்கம்), அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா (18 பக்கம்) ஆகியோர் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தனர்.
தாமதமான தீர்ப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசார ணை மார்ச் 11-ம் தேதி நிறைவடைந்ததால் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு எழுதுவதை மறுநாளே தொடங்கினார். சாட்சியங்களின் வாக்குமூலம், வழக்கறிஞர்கள் வாதங்கள், ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆடிட் டர்களின் மதிப்பீடு உள்ளிட்ட வேலைகளை தீவிரமாக்கினார். இதனால் கர்நாடக குற்றவியல் நடைமுறை விதிமுறைகளைப் பின்பற்றி குறைந்தப்பட்சம்14 நாட்களில் இருந்து 30 நாட்களில் தீர்ப்பு வழங்குவார் என எதிர்ப் பார்க்கப்பட்டது.
ஆனால் பவானி சிங் நியமனம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தீர்ப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்தது. மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இரண்டு முறை தடை விதித்ததால் தீர்ப்பு எழுதும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இறுதியாக பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது என உத்தரவிட்டதால் தீர்ப்பை நிறைவு செய்வதில் தடை விழுந்தது. இதனால் கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதினார்.
மேலும் திமுக தரப்பு,கர்நாடக அரசு தரப்பில் புதிதாக எழுத்துப் பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப் பட்டதால் அதை ஆராயும் பணியில் நீதிபதி இறங்கினார். உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி குற்றவாளிகள் தரப்பு, சுப்பிரமணியன் சுவாமி தரப்பு, திமுக தரப்பு, கர்நாடக அரசு தரப்பு ஆகிய நான்கு தரப்பு வாதங்களை ஆராய்ந்து, தீர்ப்பு எழுத வேண்டும் என்பதால் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடரும் வதந்திகள்
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறது, நாளை வெளியாகிறது என கடந்த மார்ச் 18-ம் தேதியில் இருந்து வதந்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தீர்ப்பு குறித்து ஒவ்வொரு முறை வதந்தி பரவும்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களும், அதிமுக நிர்வாகிகளும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுவார்கள். மாலை 6 மணி வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதி நேற்று வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியதால் அதிமுக நிர்வாகிகள் பெங்களூரு வில் குவிந்தனர். தீர்ப்பு தேதி குறித்து நீதிமன்ற வட்டாரத்திலும், வழக்கறிஞர்களிடத்திலும் தொடர்ந்து விசாரித்தவாறே இருந்தனர்.
கோடை விடுமுறை பொருந்தாது
இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 4-ம் தேதியில் (நேற்று) இருந்து மே 29-ம் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நீதிமன்றமும், நீதிமன்ற அலுவலகங்களும் செயல்படாது. இருப்பினும் அவசர வழக்குகளுக்காக மே 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் விடுமுறைகால சிறப்பு அமர்வுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு நேற்று கோடைகால விடுமுறையாக தொடங்கினாலும் ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி காலை 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்து, மாலை 5.30 மணி வரை வழக்கமான பணிகளை கவனித்தார். வழக்கு குறித்த ஆவணங்களை வாசித்து, தீர்ப்பு எழுதும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தீர்ப்பு தேதி குறித்து நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்த போது, “கோடைகால விடுமுறை நீதிபதி குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு நீதிமன்றத்துக்கு பொருந்தாது. எனவே அவர் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வந்து பணிகளை கவனிப்பார். தீர்ப்பு தேதி குறித்து பலவாறான வதந்திகள் உலா வந்தபோதும், எவ்வித பதற்றமும் இல்லாமல் கவனமாக தீர்ப்பு எழுதும் பணிகளில் மூழ்கியுள்ளார்.
தீர்ப்பு எழுதும் பணிகள் 70 சதவீதம் வரை மட்டுமே நிறைவடைந்திருப்பதால் இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு மிக மிக குறைவு. அநேகமாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மே 12-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கலாம். நாடே கவனித்து வரும் வழக்கு என்பதால் கூடுதலாக கால அவகாசம் பெற்று, மே மாத இறுதியிலோ ஜூன் மாதத்திலோ தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது” என்றார்கள்.