

ஜாதி, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டும் கருத்துகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் இதுதொடர்பான கேள்வியை கேரள காங்கிரஸ் எம்.பி. எம்.ஐ ஷாநவாஸ் எழுப்பினார்.
குறிப்பிட்ட மதத்தினருக்கு வாக்குரிமையை மறுப்பது தொடர்பான சிவசேனா எம்.பி.யின் கருத்து, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு கொண்டு வர வலியுறுத்திய பாஜக எம்.பி. சாக் ஷி மகராஜின் பேச்சு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே, பாஜக எம்.பி.க்கள் மதம்சார்ந்த கருத்துகளை பேசிவருவதாக குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், “ஜாதி, இனம், மதம் அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டும் எந்தவொரு கருத்தையும் மக்களவை அல்லது அவைக்கு வெளியே அரசு அங்கீகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.