

செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கடந்த 2013ம் ஆண்டில் ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் பழங்குடி இன தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக அந்தஸ்து கொண்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் செம்மர கடத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக செம்மர கடத்தலில் ஈடுபடுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர தொழிலாளர்கள் அதிகமாக கூலி கேட்பதால், தமிழக கூலி தொழிலாளர்களை இந்த பணிக்கு உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.
செம்மரம் கடத்தும் 10 வாகனங்களில், 2 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்ட போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும். மற்ற 8 வாகனங்கள் இலக்கை சென்றடையும். இதுதான் போலீஸார், வனத்துறையினர் மற்றும் கடத்தல்காரர்களுக்குள் இருக்கும் ரகசிய ஒப்பந்தம். இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் ரியல் எஸ்டேட், மதுபான கடைகள் நடத்தும் பெரும் புள்ளிகள்.