மகாராஷ்டிர முதல்வர் மீதான விமர்சனம்: எழுத்தாளர் ஷோபா டே-வுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர முதல்வர் மீதான விமர்சனம்: எழுத்தாளர் ஷோபா டே-வுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

எழுத்தாளர் ஷோபா டே-வுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்பேரவை அளித்த உரிமை மீறல் நோட்டீஸை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.

மகாராஷ்டிரத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மாலை 6 மணி முதல் 9 வரை மராத்தி திரைப்படங்கள் திரையிடுவதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து எழுத்தாளர் ஷோபா டே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். “மராத்தி திரைப்படங்களை நான் நேசிக்கிறேன். அதை எங்கே, எப்போது பார்க்கவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அல்ல. இந்த நடவடிக்கை குண்டர்த்தனம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனா எம்எல்ஏ ஒருவர் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார். மராத்தி மொழியையும் மராத்தி பேசும் மக்களையும் ஷோபா டே தொடர்ந்து அவமதித்து வருவதாக அவர் புகார் கூறினார்.

உரிமை மீறல் பிரச்சினையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ஷோபா டே-வின் விமர்சனத்துக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு எதிராக ஷோபா டே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரஃபுல்லா சி பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷோபா டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம் வாதிடும்போது, “அரசின் முடிவுக்கு எதிராகவே கருத்து கூறப்பட்டது. பேரவையின் உரிமை மீறலான இதை கருதமுடியாது. பேரவையின் உரிமைகளை பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. இதில் எதையும் ஷோபா டே மீறவில்லை” என்றார்.

இதையடுத்து மகாராஷ்டிர சபாநாயகரின் உரிமை மீறல் நோட்டீஸுக்கு நீதிபதிகள் இடைக் காலத் தடை விதித்தனர். இது குறித்து 8 வாரங்களுக்கும் பதில் அளிக்குமாறு தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in