Published : 27 Apr 2015 03:17 PM
Last Updated : 27 Apr 2015 03:17 PM

சவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து இதுவரை 2,500 பேரை மீட்டது விமானப் படை

நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன நேபாளத்தில் இந்திய விமானப் படையின் 'ஆபரேஷன் மைத்ரி'-யின் சாதூர்யமான நடவடிக்கையால் இதுவரை 2,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அடுத்த 3 நாட்களுக்கு அடித்த அதிர்வுகள் நிலைமையை மோசமடைய செய்தன. இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6,500 பேர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களிலேயே மீட்புப் பணியில் இந்திய விமானப் படை முழு வீச்சில் இறங்கியது. ஆபரேஷன் மைத்ரி என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்து வருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மிட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது.

மீட்புப் பணிகள் குறித்து இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் அவ்வப்போதைய நிலவரத்தை ட்விட்டர் குறும்பதிவுத் தளத்தில் தெரிவித்து வருகிறது.

அதன்படி, நேபாளத்தில் சனிக்கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் அதன் விளைவுகள் குறித்து யூகித்து அடுத்து 4 மணி நேரத்துக்குள் C-17 ரக விமானம் 96 வீரர்களுடன் 15 டன் எடையில் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றது. அடர்ந்த உயரிய மலைப் பிரதேசமான நேபாளத்தில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை கண்டறிவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதற்காக மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன சென்சார் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

அடுத்தகட்டமாக 24 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய அவசரக் குழு வினருடன் அடுத்தடுத்து 2 விமானங்கள் காத்மண்டு சென்றடைந்தன. இந்த முதற்கட்ட நடவடிக்கையில் 546 பேரை பேரிடர் மீட்புக் குழு மீட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நடந்த மீட்புப் பணியில் 2,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 1935 பேர் தாயகம் திரும்பினர்.

இந்திய விமானப் படையின் விமானங்கள் 10 விமானங்களின் மூலம் 500 டெண்ட்டுகள், 14 டன் நூடுல்ஸ் பொட்டலங்கள், 100 ஸ்ட்ரெச்சர்கள், ஒரு டன் மருந்துவப் பொருட்கள் என உதவிப் பொருட்களை கொண்டு சென்றது. மீட்புப் பணீயில் இருக்கும் ஹெலிகாப்டர்களை சிறப்புக் குழு கண்காணித்து வழி நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x