

நிலநடுக்கத்தால் நேபாளத்தில் சிக்கித் தவித்த 2,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்திய-நேபாள எல்லையான பிஹார் மாநிலத்தில் உள்ள ரக்சால் வந்தடைந்தனர். இதற்கிடையே மழை காரணமாக பிஹாரில் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ரக்சால் பகுதியில் முகாமிட்டுள்ள கிழக்கு சம்பரன் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கூறும்போது, “திங்கள்கிழமை இரவு முதல் நேபாளத்திலிருந்து இருநாட்டு எல்லை வழியாக 2,500-க்கும் மேற்பட்டோர் ரக்சாலுக்கு வந்தனர்.
அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப் பட்டன. பின்னர் அங்கிருந்து அவர்கள் ரயில் மற்றும் பஸ்கள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து பேரிடர் நிர்வாக துறை முதன்மை செயலாளர் வியாஸ் ஜீ கூறும்போது, “முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் நேபாளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக 30 பஸ்கள் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதன் மூலம் பிஹாரில் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 180 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.
பாட்னா மாவட்டம் பிட்டாவில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டி ஆர்எப்) 9-வது படைப் பிரிவு அதிகாரி விஜய் சின்ஹா கூறும் போது, “நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடு வதற்காக, தலா 45 வீரர்களைக் கொண்ட 3 படைப்பிரிவுகள் சாலை வழியாக திங்கள்கிழமை இரவு காத்மாண்டுக்கு புறப் பட்டுச் சென்றன. மேலும் 3 படைப்பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
நேபாளத்திலிருந்து தரை வழியாக வருபவர்களுக்கு உதவு வதற்காக, எல்லையை ஒட்டி அமைந்துள்ள பர்கானியா, புஷிதா, சோன்பர்சா மற்றும் பிட்டா ஆகிய மாவட்டங்களின் அனைத்து நுழைவு மையங்களிலும் மருத்துவர்கள் குழு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
மழையால் மீட்புப் பணி பாதிப்பு
ஏற்கெனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிஹாரில் நேற்று மழை பெய்ததால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. முன்னதாக தலைநகர் பாட்னா மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அதன் பிறகு மழை பெய்தது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் அருகே வங்காள விரிகுடாவில் ஏற் பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாகவும், நாளை வரை மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஏ.கே.சென் தெரிவித்தார்.
பஸ், லாரி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
மத்திய அரசின் போக்குவரத்து பாதுகாப்பு மசோதா மற்றும் 49 பாலங்களில் சுங்க வரி வசூலிக்கும் பிஹார் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை வேலைநிறுத்தம் செய்ய பஸ், லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வேலைநிறுத்தத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக பிஹார் வாகன போக்குவரத்து சங்கங்களின் சம்மேளன தலைவர் உதய் சின்ஹா நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.