

தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலையில் போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் பலியானதுடன் 2 போலீஸார் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், நல் கொண்டா மாவட்டம், சூர்யா பேட்டை பஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு விஜய வாடா- ஹைதராபாத் பஸ்ஸில் தணிக்கை செய்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஊர்காவல் படைவீரர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் இன்ஸ்பெக்டர் மேகுலய்யா, ஊர்காவல் படை வீரர் கிஷோர் ஆகிய இருவர் படு காயமடைந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த துரைபாபு என்பவரும் காரில் சுடப் பட்டார். இவர்கள் மூன்று பேரும் தற் போது ஹைதராபாத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர் களைப் பிடிக்க தெலங்கானா போலீஸார் பல்வேறு குழுக்களை அமைத்தனர். இக்குழுவினர் குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் நல்கொண்டா மாவட்டம், சீதாராம புரம் பகுதியில் குற்றவாளிகள் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகங்கி ரெட்டி, சப் இன்ஸ் பெக்டர் சித்தய்யா, கான்ஸ்டபிள் நாகராஜு மற்றும் சில போலீஸார் சம்பவ இடத்துக்கு காலை 6 மணியளவில் சென்றனர். இவர்களைக் கண்ட மர்ம நபர்கள், போலீஸாரை நோக்கி 6 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங் கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த லிங்கமல்லா விடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இவர்களை போலீஸார் ஜீப்பில் விரட்டிச் சென்றனர். அப்போது, ஜானகி புரம் ஏரிக்கரையில் போலீஸார் மீது மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கான்ஸ்டபிள் நாகராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். போலீஸார் திருப்பிச் சுட்டத் தில் மர்ம நபர்கள் இருவரும் பலியா யினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், எஸ்.ஐ. சித்தய்யாவின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. இன்ஸ் பெக்டர் பால கங்கி ரெட்டியும் படுகாயமடைந்தார்.
பின்னர் தகவல் அறிந்த போலீ ஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். படுகாயமடைந்த போலீஸாரை ஹைதராபாத்தில் உள்ள காமிநேனி தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சித்தய்யாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு தெலங்கானா மாநில டி.ஐ.ஜி. அனுராக் ஷர்மா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று நேரில் விசாரனை மேற் கொண்டனர். இதில் இறந்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அக்ரம் அயூப், ஜாகீர் என தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச சிறையிலிருந்த தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் தெலங்கானா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங் களில் வங்கி, நகைக் கடைகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங் களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்த துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் என்கவுன்ட்டர் நடந்த இடத் தில் டெல்லியிலிருந்து ஒருவர் கடந்த 2-ம் தேதி ஹைதராபாத்துக்கு வந்ததற்கான ரயில் டிக்கெட்டும் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. ஆதலால் இவர்களுடன் மற்றொரு நபரும் இருந்திருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர். அவர் யார்? எங்கு இருக்கிறார்? என்பது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்துபோன கான்ஸ்டபிள் நாகராஜுவுக்கு கடந்த 6 மாதங் களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இவர் பைக்கில் தனி யாக தீவிரவாதிகளை சுமார் 10 கி. மீட்டர் தூரம் துரத்திச் சென் றுள்ளார். ஆனால் சாலை வளை வில் காத்திருந்த தீவிரவாதிகள், நாகராஜுவை சுட்டுக் கொன்றனர்.
இவரது குடும்பத்தாருக்கு தெலங்கானா அரசு ரூ.40 லட்சம் உதவித் தொகை அறிவித்துள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி தெரிவித்துள்ளார். போலீஸாரின் சிறப்பான பணியை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வெகு வாக பாராட்டியுள்ளார்.
தெலங்கானாவில் தீவிரவாதத் துக்கு எள்ளளவும் இடம் கொடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.