

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முக்கிய அமைச்சர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் போலீஸார் மீது மாவோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், சர்ச்சைக்குரிய நில மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டன.
பிரதமர் மோடி வெளிநாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி யுள்ள மாவோ தீவிரவாதிகளை வேட்டையாடச் சென்ற அதிரடிப் படை போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதில் 7 போலீஸார் கொல்லப் பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சத்தீஸ் கர் அரசுக்கு தேவையான உதவி களைச் செய்வது என இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்புப் படையின ருக்கு சவாலாக விளங்கும் மாவோ தீவிரவாத பிரச்சினையைக் கையாள்வது குறித்தும் அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக் கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அப்போது எழக் கூடிய பிரச்சினைகள் மற்றும் மாநிலங்களவையில் சர்ச்சைக் குரிய நில மசோதாவுக்கு உள்ள எதிர்ப்பு ஆகியவற்றை சமாளிப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை சட்டமாக்குவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. இந்த மசோதா விவசாயிகளுக்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் முத்திரை குத்தி அதை தீவிரமாக எதிர்த்து வருகின்றன.
அதேநேரம் எப்படியாவது மசோதாவை நிறைவேற்ற வேண் டும் என மத்திய அரசு தீர்மானமாக உள்ளது. அதற்காக, அவசரச் சட்டம் காலாவதி ஆக இருந்த நிலையில், மீண்டும் அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
- பிடிஐ