

தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன இந்திய மலையேறும் வீர்ர மல்லி மஸ்தான் பாபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு நாட்டின் முன்னணி மலையேறும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவர் காரக்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்.
இவர் உலகிலேயே எவரெஸ்ட் உட்பட 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான 7 சிகரங்களின் மீது வேகமாக ஏறியவர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு 172 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
குறிப்பாக, அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஆந்திர மாநிலவாசி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சிலி, கொலம்பியா, பெரு, அர்ஜென்டினா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகளில் பரவியுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் ஏறுவதற்கான குழுவில் இடம்பெறுவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நெல்லூரிலிருந்து புறப்பட்டுச் சென்றார். மலைத்தொடர் பயணத்தைத் தொடங்கியபோதே அப்பகுதியில் வானிலை மோசமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 24-ம் தேதி அந்த மலையேறும் குழுவிலிருந்து பாபு காணாமல் போனார். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் கூறும்போது, “அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் ஆண்டிஸ் மலைத்தொடரில் காணாமல் போன பாபுவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக பாபுவின் ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் ‘ரெஸ்கியூ மல்லி மஸ்தான் பாபு’ என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கினர். இதில், பாபுவின் தேடுதல் வேட்டை குறித்த செய்திகள் அவ்வப்போது பகிரப்பட்டன.
இந்நிலையில், அந்த பேஸ்புக் பக்கத்தில் நேற்று “தனக்கு பிரியமான குழந்தையை மலைத்தொடர் அழைத்துக் கொண்டது… மல்லி மஸ்தான் பாபுவின் ஆன்மா சாந்தி அடைந்தது” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறஇத்து அக்பரூதீன் ட்விட்டரில், “மல்லி மஸ்தான் பாபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அர்ஜென்டினா மற்றும் சிலியில் உள்ள தூதரக அதிகாரிகள் பாபுவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்” என கூறியுள்ளார்.
மஸ்தான் பாபுவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.