

அணு மின்சாரம் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு சப்ளை செய்ய கனடா ஒப்புக்கொண்டது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இறுதியாக கனடாவுக்குச் சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கனடா சென்றார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கனடா சென்றிருப்பது இதுவே முதன்முறை.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அணு மின்சாரம் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா சப்ளை செய்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
மேலும், திறன் மேம்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விண்வெளியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
யுரேனியம் சப்ளை தொடர்பான ஒப்பந்தத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில், கனடா 280 மில்லியன் டாலர் மதிப்புள்ள யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கும்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவது, இந்தியா மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது" என்றார்.
இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான மூலப்பொருட்களை விற்பனை செய்வதை 1976 ஆம் கனடா தடை செய்தது. அதன்பின், 2012-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.
அதன்படி, கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய வகை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என்பதை முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் 22 அணு மின் நிலையங்கள் இருக்கின்றன. அடுத்த 20 மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மோடி பேச்சு
இதனிடையே, டொரன்டோ நகரில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மீது சிலர் ஏற்படுத்திய கறையை அகற்றுவோம் என்றும், சர்வதேச அரங்கில் ஊழல் நாடு என்ற பிம்பத்தை உடைத்து திறமையான நாடாக மாற்றுவோம் என்றும் உறுதிபட கூறியது குறிப்பிடத்தக்கது.
அணு மின்சக்தி குறித்து அவர் பேசும்போது, "வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன. இந்தப் பிரச்சினை குறித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஏ.சி. அறைகளுக்குள் இருந்துகொண்டு விவாதிக்கிறார்கள். ஆனால், அணு மின்சாரம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின் சக்தியை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோதே கனடாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தேன். இனி வரும் காலங்களில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றும்" என்றார் மோடி.