

ரயில் சரக்கு கட்டணத்தை சற்று அதிகரிப்பதன் மூலம் பயணிகள் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது என்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
இதுகுறித்து அவர் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறியதாவது:
சரக்கு கட்டணத்தை ரயில்வே சற்று கூடுதலாக நிர்ணயிக்கிறது. இதன் மூலம் பயணிகள் கட்டணத்தை சற்று குறைக்க முடிகிறது. சரக்குகளை எதன் மூலம் அனுப்பலாம் என ஒருவர் முடிவு எடுப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இதில் சரக்கு கட்டணமும் ஒன்று.
ரயில்வே துறையின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிப்பதன் மூலம் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை அளிக்க முடியும். பிற வகை போக்குவரத்துடன் போட்டியிடவும் முடியும்.
ரயில் பாதைகளை விரிவுபடுத்தவும், அவற்றில் நெரிசலை குறைக்கவும் ரயில்வே ஈட்டும் வருவாய் மற்றும் பட்ஜெட் நிதியுதவியுடன் கூடுதல் நிதி திரட்டுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.
ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய விரும்புகிறோம். ஏற்கெனவே உள்ள நிதியாரங்களுடன் பன்னோக்கு வளர்ச்சி வங்கிகள் மற்றும் பென்ஷன் நிதி மூலம் கூடுதல் நிதி திரட்டும் திட்டம் உள்ளது.
இது தவிர, சரக்குகள் ஊக்குவிப்பு திட்டங்கள், நீண்டதூர ரயில்களை இயக்குவது போன்ற பல்வேறு குறுகிய கால உடனடி நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது.
சரக்கு வேகன்கள், முனையங்கள் அமைப்பதில் தனியார் முதலீடுகளை பெறும் திட்டமும் உள்ளது. குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் மூலம் ரயில்வே துறை வரும் ஆண்டுகளில் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்காற்றும்.
இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.