Published : 08 Apr 2015 06:13 PM
Last Updated : 08 Apr 2015 06:13 PM

குஜராத்: உள்ளூர் இந்துக்களின் அழுத்தங்களால் வீட்டை விற்ற இஸ்லாமியர்

குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு வாங்கிய முஸ்லிம் நபர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விற்கச் செய்துள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

இதன் பின்னணியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் பாவ்நகர் பகுதி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் இது பற்றி கூறும் போது, “முஸ்லிம் ஒருவர் இப்பகுதியில் வீடு ஒன்றை வாங்கினார். ஆனால் சமரசம் ஏற்பட்டு அவர் இந்து ஒருவருக்கு வீட்டை 3 மாதங்களுக்கு முன்பு விற்றுவிட்டார்” என்று கூறுகிறார்.

ஜனவரி 2014-ல் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர் அலியஸ்கர் ஸவேரி என்பவர் பாவ்நகரில் பங்களா ஒன்றை வாங்கினார். ஆனால் கடந்த டிசம்பரில் தனது இந்த பங்களாவை பூமிதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.

இந்துக்கள் அதிகமுள்ள இப்பகுதியில் சுமார் 60 வீடுகள் உள்ளன. அலியஸ்கர் ஸவேரி வீடு வாங்கியது முதல் அப்பகுதிவாசிகள் அவருக்கு பலவித தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளனர்.

ஏப்ரல் 2014-ல் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, முஸ்லிம் நபர் வீட்டை ஆக்ரமித்து அவரை வெளியேற்றுமாறு தனது ஆதரவாளர்களைத் திரட்டியதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு தொகாடியா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

பங்களா வாங்கிய முஸ்லிம் நபர் அலியஸ்கரின் வீட்டின் முன்னால் அப்பகுதி இந்துக்கள், வி.எச்.பி. ஆதரவுடன் குழுமி பஜனைகளையும் நடத்தியுள்ளனர்.

இதில் இந்துத்துவா அமைப்பின் பங்கு பற்றி பாவ்நகர் வி.எச்.பி. தலைவர் எஸ்.டி.ஜனி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, "நாங்கள் உள்ளூர் மக்களின் போராட்டத்தை ஆதரித்து ‘ராம் தர்பார்’ நடத்தினோம். ஒரு முஸ்லிம் அப்பகுதியில் வீடு வாங்கினார். ஆனால் சமரசம் ஏற்பட்டு அவர் 3 மாதங்களுக்கு முன்பாக இந்து ஒருவருக்கு தனது சொத்தை விற்றுவிட்டுச் சென்றார்.

'தொந்தரவு பகுதிகள் சட்டம்' என்பதை பாவ்நகர் பகுதியில் அமல்படுத்த வி.எச்.பி. முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது" என்றார். இந்தச் சட்டம் அசையா சொத்துக்களை வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பதைத் தடுக்கும் சட்டம் ஆகும்.

அலியஸ்கர் ஸவேரி வலுக்கட்டாயமாக வீட்டை விற்கச் செய்தது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். மறுத்துள்ளது, “எங்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது” என்று அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x