ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி

ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

ஆப்கானை அதன் வன்முறையிலிருந்து மீட்க அந்நாட்டு மக்களுக்கு தோள் கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவும் என்று அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் செவ்வாயன்று பிரதமர் மோடியை சந்தித்த அவர், பாதுகாப்பு, சாலை இணைப்பு வசதி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாக விவாதித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியது:

பூகோள ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தடைகள் இருந்த போதிலும் அதைத்தாண்டி இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மலர்ந்து முழுமையடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டும் என்ற ஆப்கானிஸ்தான் அதிபரின் லட்சய திட்டத்துக்கு இந்தியா ஆதரவு தரும்.

இந்த ஒத்துழைப்பு அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினரின் விருப்பங்கள், உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும். ஆப்கானிஸ்தானில் வெற்றி ஏற்பட வேண்டும் என்றால் அங்கு நடக்கும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதும் அண்டை நாடுகள் ஆக்கபூர்வ அணுகுமுறையை கையாளவதும் அவசியம்.

ஆப்கானிஸ்தானுடன் நல்லெண்ணமும் நட்புறவும் இருப்பதை இந்தியா ஆதரிக்கிறது அந்நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து வளம் மிக்கதாக மாற இந்தியா உறுதுணை புரியும். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் தொடர்வது வேதனை தருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டு பாதுகாப்புப்படைகள் பாதுகாக்கின்றன இதற்காக நன்றி தெரிவிப்பது எனது கடமை.

ஆப்கானிஸ்தானுடனான ஒத்துழைப்புகள் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆப்கானிஸ்தான் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தப்படும் என்றார் மோடி.

பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் பேசிய மோடி, அண்டை நாட்டில் இருந்து வரும் தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அந்நாடு தீவிரவாதத்துக்கு உதவுவதை நிறுத்த வேண்டும். தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வலியை நாங்களும் உணர்ந்துள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்போம் என்றார்.

“ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் மக்களை வேட்டையாடுகிறது. இதை முறியடிக்க வேண்டும்” என்று அஷ்ரப் கூறினார். முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அஷ்ரப் சந்தித்துப் பேசினார்.

புதனன்று இந்திய தொழில்துறையினரை அஷ்ரப் சந்தித்துப் பேச இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in