பாகிஸ்தான் கொடியை ஏந்திச் செல்லவில்லை: மஸரத் ஆலம் மறுப்பு

பாகிஸ்தான் கொடியை ஏந்திச் செல்லவில்லை: மஸரத் ஆலம் மறுப்பு
Updated on
1 min read

காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகளை ஏந்திச் சென்றது தொடர்பான விவகாரத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார் மஸரத் ஆலம்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான கிலானி 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியானார்.

இந்நிலையில், அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் புதன்கிழமை ஸ்ரீநகரில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கடந்த மாதம் சிறையிலிருந்து வெளிவந்த மஸ்ரத் ஆலம் தலைமையேற்று நடத்தினார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள், தங்களது கைகளில் ஹுரியத் மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஏந்தி, அந்த நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த நிகழ்வு மத்திய அரசை அதிருப்தியடைய செய்துள்ளது. தேச விரோதமான செயலுக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் மஸரத் ஆலம் கூறும்போது, “கிலானிக்கு வரவேற்பு நிகழ்ச்சியே இது. இதில் சில இளைஞர்கள் கொடியை (பாகிஸ்தான்) ஏந்திச் சென்றனர். இதற்கு என்னை ஏன் பொறுப்பாளியாக்க வேண்டும்?

இந்த மாநிலத்தின் பொதுவான போக்காகவே இது இருந்து வருகிறது. ஒரு தனிநபரின் செயல் அல்ல இது. இதற்கு ஒரு நபரைப் பொறுப்பாளியாக்குவது சரியான செயல் அல்ல என்றே நான் கருதுகிறேன்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டுமே வாழ உரிமை படைத்தவர்கள் அல்லர். நாங்கள் மண்ணின் மைந்தர்கள், எங்களுக்கும் இங்கு வாழ உரிமை உள்ளது. இது எங்கள் நிலம்...

என் மீது வழக்கு பதிவு செய்வது ஒன்றும் எனக்குப் புதிதல்ல” என்றார் மஸரத் ஆலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in