

‘‘ஜனதா கட்சிகள் இணைப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிஹார் சட்டப்பேரவைக்குத் தயாராகும் வகையில், சரியான நேரத்தில் கட்சிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும். புதிய கட்சிக்கு கொடி, சின்னம் ஆகியவை பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்று ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் டெல்லியைத் தவிர மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வை தோற்கடிக்க ஜனதா பரிவார் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனதா கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கட்சி தொடங்கி பிஹார் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி), முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகளை இணைத்து புதிய கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி தேசிய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜனதா பரிவார் கட்சிகளை ஒன்றிணைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. பிஹார் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் சரியான நேரத்தில் கட்சிகள் இணைப்பு பற்றி அறிவிப்போம். ஜனதா பரிவாரில் உள்ள 6 கட்சிகளும் இணைந்து புதியக் கட்சி தொடங்க முடிவெடுத்துள்ளன.
மேலும், புதிய கட்சிக்கான சின்னம், கொடியை 6 கட்சிகளும் முடிவு செய்துள்ளன. புதிய கட்சிக்கு, ‘சமாஜ்வாதி ஜனதா தளம்’ அல்லது ‘சமாஜ்வாதி ஜனதா கட்சி’ என்ற 2 பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு தியாகி கூறினார்.
பிஹார் தேர்தலில் ஐஜத.வுக்கும் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துக்கும் தொகுதி பங்கீடு எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘பிஹார் தேர்தலில்தான் எங்கள் முழு கவனமும் இருக்கும். எனினும் முதலில் புதிய கட்சி உருவாகட்டும். எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்தலை சந்திப்போம். அதற்காகத்தான் ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கிறோம்’’ என்று தியாகி பதில் அளித்தார்.
ஜனதா பரிவார் கட்சிகளை ஒன்றிணைக்கும் விவகாரங்களை கவனிக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு அதிகாரம் வழங்கி உள்ளனர். அவர் லக்னோவில் இருந்து விரைவில் டெல்லி செல்கிறார்.
அங்கு இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவர் அபய் சவுதாலா மற்றும் தேவகவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், ஜனதா கட்சிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்’’ என்று தியாகி கூறினார்.
இதுகுறித்து லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘புதிய கட்சிக்கு சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தையே வைத்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவப்பு பச்சை நிறத்தில் கொடி இருக்கும்’’ என்று தெரிவித்தார்.