

நில மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பாஜக குற்றம்சாட்டி இருக்கிறது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான எம்.வெங்கய்ய நாயுடு நேற்று கூறியதாவது:
நில கையகப்படுத்துதல் அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சி வெளியிடும் விமர்சனங்கள் சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளன.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எத்தனையோ அவசரச் சட்டங்கள் கொண்டுவரப் பட்டன, அதை பட்டியலிடலாம். இந்த விவகாரத்தில் ஜனநாயக படுகொலை என குற்றம்சாட்ட எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை. முந்தைய ஆட்சி காலங் களில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்கள் பற்றிய விவரங்கள் பாஜக எம்.பி.க்களிடம் உள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்று வதற்கு முன் முந்தைய ஆட்சிக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் பற்றிய விவ ரத்தை அம்பலப்படுத்துவோம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டங்களை சாதனை என விவரிக்கலாம். கடந்த 50 ஆண்டு காலத்தில் 456 அவசரச் சட்டங்களை பிறப்பித்தது.
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் 77 அவசரச்சட்டங்களும் இந்திரா காந்தி ஆட்சியில் 77 அவசரச் சட்டங்களும் ராஜீவ் காந்தி ஆட்சியில் 35 அவசரச் சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் ஆதரவிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் மாதத்துக்கு 3 என்ற கணக்கில் 77 அவசரச் சட்டங்கள் பிறப் பிக்கப்பட்டன. ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 61 ஆனால் அவசர சட்டங்கள் 77 பிறப்பிக்கப்பட்டன. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.
தவறான தகவல்களை பரப்புவதற்கு எல்லை உள்ளது. திருப்பித் திருப்பிச் சொல்வதால் பொய் உண்மையாகிவிடாது. ஜனநாயக படுகொலை நிகழ்த்துவதாக பாஜக மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி, நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதையும் பத்திரிகை கள் ஒடுக்கப்பட்டதையும் மறந்துவிடக்கூடாது.
ஆளும் கட்சியை குறைகூறும் முன்பு தனது முதுகை காங்கிரஸ் பார்த்துக்கொள்ளட்டும். பாவச் செயல்களை செய்துவிட்டு கோயில், குளம் செல்வது போல் உள்ளது எதிர்க்கட்சியின் போக்கு.
குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டங்கள் பற்றி காங்கிரஸ் குறைகூறுகிறது. ஆனால் அதுதான் நல்ல நடைமுறை என அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்..
பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சி எம்பிக்களிடம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பழைய ஆவணங்களை நாயுடு வழங்கினார்.