

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை என கூறிவந்த சைலஜா (58) உடல் நலக்குறைவால் நேற்று பெங்களூருவில் உயிரிழந்தார்.
பெங்களூரு கெங்கேரி அருகேயுள்ள ராமசந்திரா பகுதியை சேர்ந்தவர் சைலஜா. இவர் தனது கணவர் சாரதி, மகள் அம்ருதாவுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அக்கா என சைலஜா கூறி வந்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் தனக்கு ஜெயலலிதா உதவ வேண்டும் என ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வந்தார்.
கடந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க சைலஜா முயற்சி செய்தார். ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானபோது அவரை சந்திப்பதற்காக தனது மகள் அம்ருதாவுடன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே காத்திருந்தார்.
ஆனால் ஜெயலலிதா அவரை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சைலஜா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஏழ்மை காரணமாக மருத்துவ சிகிச்சை செலவுகளை சமாளிக்க முடியாததால் கடந்த சில நாட் களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இதனிடையே உடல் நலக் குறைவு காரணமாக சைலஜா நேற்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதில் மைசூருவில் வசித்துவரும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று மாலை மைசூரு சாலையில் உள்ள மயானத்தில் சைலஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சைலஜாவின் மகள் அம்ருதா, ''அம்மா உயிரோடு இருந்தவரை அவரது கடைசி ஆசை நிறைவேறவில்லை. அவரது மரண செய்தி ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. இனி என்ன இருக்கிறது?'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.