

டெல்லியின் துவாரகா பகுதியில் பாஜக ஏற்பாடு செய்திருந்த விவசாயப் பேரணியில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே விவசாயிகள் பங்கேற்றனர். சொற்ப அளவில் இருந்த கூட்டத்துக்கு நிலச் சட்டத்தைப் பற்றி விளக்கினார் அமைச்சர் கட்கரி.
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் கட்கரி தலைமையில் நடந்த விவசாயிகள் பேரணி சொதப்பிக் கொண்டது அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
டெல்லி பாஜகவின் விவசாயப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஆனால், அந்நிகழ்ச்சிக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்தார் அமைச்சர் நிதின் கட்கரி. அவர் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே டெல்லி எம்.பி. மீனாட்சி லேகி அரங்கை விட்டுச் சென்றிருந்தார்.
நிகழ்ச்சியில் கட்கரி பேசியதாவது, "நான் தாமதமாக வந்ததற்கு என்னை மன்னியுங்கள். நிலச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. மகாராஷ்டிரா, ஹரியாணா, மேகாலாயா போன்ற மாநிலங்களின் முன்னாள் முதல்வர்கள் அப்போதைய ஐ.மு.கூட்டணி அரசுக்கு எழுதிய கடிதத்தில் நிலச் சட்டத்தில் திருத்தம் கோரினார். ஆனால், அதே மாநில முதல்வர்களே தற்போது எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இதிலிருந்தே அவர்களது இரட்டை வேடம் அம்பலமாகிறது.
கிராமப்புறங்களில் கட்டமைப்பை மேம்படுத்த, தொழில் வளத்தைப் பெறுக்க நிலம் கையகப்படுத்துதல் அவசியம். ஆனால், அதே வேளையில் விவசாயிகள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். இருப்பினும், ஹர்ஷவர்த்தன், உதித் ராஜ் ஆகியோர் பங்கேற்கவில்லை.
100 பேர் கூட திரளாத விவசாயிகள் பேரணியில் ஒரு வழியாக பேசி முடித்துக் கிளம்பினார் கட்கரி. இன்னும் இரண்டு பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை நரேலா, பாவனா பகுதிகளில் நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது.