Published : 27 May 2014 04:52 PM
Last Updated : 27 May 2014 04:52 PM

மத்திய அமைச்சரவையில் பாலியான்: காங்கிரஸ் சாடல்

முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முசாபர் நகர் தொகுதி எம்பி சஞ்சீவ் பல்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச் சரவையில் இடம் கொடுத்துள்ள தற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலர் ஷகீல் அகமது வலைத் தளத்தில் வெளியிட்ட கருத்து வருமாறு:

முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது பற்றி ஊடகங்கள் வினோதமாக பார்ப்பது ஏன் என்பது தெரிய வில்லை. மோடி அரசுதானே இது!. பிறகு ஏன் இந்த வியப்பு என்று குறிப்பிட்டுள்ளார் அகமது.

கால்நடை மருத்துவரான பல்யான் இணை அமைச்சராக திங்கள்கிழமை பதவியேற்றார். பாஜகவில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குத்பா கிராமத்தைச் சேர்ந்தவரான பல்யான் ஜாத் இனத்தவர். முசாபர்நகரில் கலவரம் வெடிக்கும் முன்பே, தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தி லிருந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு எம்பிகளில் பல்யான் ஒருவர். மற்றொருவர் காசியாபாத் எம்பியும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் ஆவார்.

தடையுத்தரவை மீறி கடந்த ஆண்டு ஜாதிக்கூட்டம் நடத்திட முக்கிய காரணமாக இருந்தவர் பல்யான். இந்த கூட்டத்துக்குப் பிறகே அங்கு பதற்றம் ஏற்பட்டு அது வன்முறை மோதலாக மாறியது. இரு பிரிவினருக்கு மத்தியில் விரோதம் ஏற்பட காரணமாக இருந்தார் எனவும் தடை உத்தரவை மீறினார் என்றும் பல்யான் மீது போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் பல்யான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என பாஜக கூறி வருகிறது.

முசாபர்நகரில் மூண்ட வகுப்புக் கலவரத்தில் 60-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x