

இந்தியா மீது போரை திணித்தால் பின்வாங்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் வியாழனன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல்களை நடத்துவது இல்லை. ஆனால் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அதேபோல இந்தியா மீது போரை திணித்தால் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
எல்லைப் பாதுகாப்புப் படை திறம்பட பணியாற்றி வருகிறது. நிலத்தில் மட்டுமல்ல, நதியோரம் மற்றும் கடலோர எல்லைப் பகுதிகளிலும் பி.எஸ்.எப். வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் உணவின்றிகூட வீரர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் ஈடுஇணையில்லை.
எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் தங்களின் இருப்பிடத்தைவிட்டு ஓடவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
வங்கதேசம் மற்றும் குஜராத் எல்லைப் பகுதிகளில் 6 மிதக்கும் எல்லைச் சாவடிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்கள் வழங்கப்படும்.