

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நஸிம் ஜைதி பொறுப்பேற்றுக் கொண்டார். ‘‘எப்பாடுபட்டாவது தேர்தல்களை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதே, தேர்தல் ஆணையத்தின் நோக்கம்’’ என்று அவர் உறுதி அளித்தார்..
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பிரம்மாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தேர்தல் ஆணையர் நஸிம் ஜைதி, நாட்டின் 20-வது தலைமை தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் 2017 ஜூலை வரை அவர் பதவி வகிப்பார். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த அவர் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் நஸிம் ஜைதி கூறியதாவது:
முறைகேடுகள் இல்லாமல் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதுதான் ஆணையத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். சமூகத்தின் எல்லா பிரிவினரின் பங்கேற்பு மற்றும் வாக்காளர்கள் எளிதாக வாக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவோம். எனக்கு முன்னால் செயல்பட்ட ஆணையர்கள் போலவே வெளிப்படையான அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படும்.
இவ்வாறு நஸிம் ஜைதி கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பதவிகள் உள்ளன. தேர்தல் ஆணையராக இருந்த பிரம்மா, தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட பின் ஓர் இடம் காலியாக உள்ளது. இப்போது நஸிமும் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு விட்டதால் மீதமுள்ள 2 ஆணையர் பதவிகளும் காலியாக உள்ளன. எனவே, 2 தேர்தல் ஆணையர்களை புதிதாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதிதாகப் பதவியேற்றுள்ள நஸிம் தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் பிஹார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கும்.