

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என பாஜக-வைச் சேர்ந்த ஹரியாணா விவசாயத் துறை அமைச்சர் ஓ.பி.தங்கர் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
நாடு முழுவதிலும் பல மாநிலங்களிலும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக-வைச் சேர்ந்தவரும் ஹரியாணா அமைச்சருமான ஓ.பி.தங்கர், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் அரசின் உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது, "தற்கொலை செய்துகொள்வது மிகப் பெரிய குற்றம். இந்தியச் சட்டத்தின்படி இந்த செயல் தண்டனைக்குரியது. பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களே தற்கொலை செய்துகொள்வார்கள். அத்தகைய விவசாயிகள் அனைவரும் கோழைகள், கிரிமினல் குற்றவாளிகள்.
தற்கொலை செய்துகொண்டு அவர்களது குழந்தைகளை விவசாயிகள் கடனாளியாக மாற்றிவிடுகின்றனர். இவர்கள் நிதி உதவி பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்களே இல்லை" என்றார்.
ஹரியாணா மாநிலத்தில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளன. விவசாயிகளுக்கு 1,092 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கட்டார் திங்கள்கிழமை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இன்று (புதன்கிழமை) காலை முதல் தங்கரின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல்வேறு விவசாய அமைப்புகளும் அமைச்சர் அவரது பேச்சை திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.