Published : 11 Apr 2015 08:32 AM
Last Updated : 11 Apr 2015 08:32 AM

கர்நாடகத்தில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

நாட்டில் முதல் முறையாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் கர்நாடகத்தில் உள்ள 6.5 கோடி மக்களின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

இந்திய விடுதலைக்கு முன்னர் 1931-ம் ஆண்டு நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்ததும் பொருளா தார ரீதியாக பின்தங்கியுள்ள வர்களுக்கு நலத்திட்டங்களை வகுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்தது.

இதற்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இந்து மடங்களும், பல்வேறு கன்னட அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்களிடம் சாதிய உணர்வு அதிகரிக்கும். இதனால் சமூகத் தில் தேவையற்ற மோதல்கள் உருவாகும் என எச்சரித்தனர். ஆனால் கர்நாடக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் உறுதியாக இருந்தது.

இன்று தொடக்கம்

அதன்படி, இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை 20 நாட்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இப் பணியில் 30 மாவட்ட ஆட்சியர்க‌ள், 8 மண்டல ஆணையர்கள், 176 வட்டாட்சியர் கள் உட்பட 1 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த அதிகாரிகள் கர்நாடகத்தில் உள்ள 1.31 கோடி குடும்பங்களில் உள்ள 6.5 கோடி பேரையும் சந்தித்து விவரங்களை சேகரிப்பர். இதில், பிறப்பு, கல்வித் தகுதி, வேலை, சாதி, மதம், மொழி, வருமானம், சொத்து, உடல் சார்ந்த பிரச்சினைகள் உட்பட 55 கேள்விகள் கேட்கப்படும்.

மக்களுக்கு தங்களின் சாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க விருப்பம் இல்லையென்றால், 'விருப்பம் இல்லை' என தெரிவிக்கலாம்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும் போது,''19-ம் நூற்றாண்டுக்கு முன்பே கர்நாடகத்தில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் செயல் படுத்தப்பட்டுள்ளது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் நாட்டுக்கே கர்நாடகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது'' என்றார்

எத்தனை சாதிகள்?

கர்நாடக அரசின் புள்ளி விவரத்தின்படி பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர் ஆகியவற்றில் 1,357 சாதிகளும், பட்டியல் இனத்தவர் பிரிவில் 101 சாதிகளும், பழங்குடியினர் பிரிவில் 50 சாதிகளும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x