Published : 05 May 2014 12:00 AM
Last Updated : 05 May 2014 12:00 AM

அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகத்தைத் தாக்க தீவிரவாதிகள் சதி: தீவிரவாதி ஜாகீர் உசேனிடம் நடத்திய விசாரணையில் அம்பலம்

இந்தியாவில் உள்ள 2 வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதி ஜாகீர் உசேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, இது தொடர்பாக ஆதாரத்துடன் கூடிய தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதர கத்தில் பணியாற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த அதிகாரி களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்திற்கு உளவு பார்க்க வந்தார். அவரை தமிழக போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந் ததாவது: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் தாக்குவதற்கு திட்டமிடுவதற்கான உளவு வேலையை செய்வதற்கு ஜாகீர் உசேன் சென்னைக்கு வந்துள்ளார். இந்த தாக்குதலை திட்டமிடுவதற்காக மாலத்தீவில் இருக்கும் மேலும் 2 பேரை சென்னைக்கு அனுப்ப ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு முடிவு செய்திருந்தது. அவர்களுக்கான பயண ஆவணங்களைத் தயாரிக்கும் பணியும், அவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஜாகீர் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆள் கடத்தல், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு, கள்ள நோட்டு கடத்தல் உள்ளிட்ட பணிகளில் ஜாகீர் உசேன் ஏற்கெனவே ஈடுபட்டு வந்ததால், இந்த உளவுப் பணிக்கு அவரை ஐ.எஸ்.ஐ. தேர்ந்தெடுத்துள்ளது.

தன்னை சென்னைக்கு அனுப்பியவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆமிர் ஜுபைர் சித்திக் என்று ஜாகீர் உசேன் கூறியுள்ளார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும், சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் வேவுபார்த்த ஜாகீர் உசேன், அந்த கட்டிடங்களையும், அவ்வழி யாகச் செல்லும் சாலை அமைப்பு களையும் புகைப்படம் எடுத்து இணையம் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பியுள்ளார். அதற்கான ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை அறிய ஜாகீர் உசேனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் தூதரகம் மறுப்பு:

இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களைத் தாக்க ஐ.எஸ்.ஐ. அமைப்புச் சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது தவுத் எடிஷாம் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சிப்பதாகவும், பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் எப்போதும் ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x