

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குரிமையைத் திரும் பப் பெற வேண்டும் என்ற சிவ சேனாவின் கருத்துக்குப் பின்னணி யில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று லக்னோவில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய மாயாவதி மேலும் கூறியதாவது:
முஸ்லிம்களின் வாக்குரிமை யைத் திரும்பப் பெற வேண்டும் என்ற சிவசேனாவின் கருத்து அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சிவசேனாவின் இந்தக் கருத்துக்குப் பின்னணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றால், அது தனது கூட்டணியில் இருந்து சிவசேனாவை வெளி யேற்ற வேண்டும்.
இன்று அம்பேத்கர் மீது காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி என அனைவருக்கும் பற்று ஏற்பட்டுள்ளது. இது அரசியல் சுய லாபத்தை எதிர்பார்த்து உரு வானது. அவர்கள் அனை வருமே தலித்துகளுக்கு எதிரானவர் கள்தான்.
1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனது பண பலத்தின் மூலமாக அம்பேத்கரைத் தேர்த லில் தோல்வியடையச் செய்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில் இருந்தது. அது நினைத்திருந்தால் அம்பேத் கருக்கு எப்போதோ 'பாரத ரத்னா' வழங்கியிருக்க முடியும். ஆனால் வி.பி.சிங் ஆட்சியில்தான் அவருக்கு அந்த விருது வழங்கப் பட்டது.
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தலித்துகளின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, பகு ஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்கப் படலாம். ஆனால் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
நாட்டில் விவசாயிகள் துன்பத் தில் துவளும்போது, நமது பிரதமர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார். இப்போது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் ஜெர்மனிக்குச் சுற்றுலா செல்ல இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பருவம் தப்பிய மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அகிலேஷ் யாதவ் அரசு இழப்பீடு தருகிறது. எந்த ஓர் ஆய்வும் இல்லாது விவசாயிகளுக்கு வெறுமனே ரூ.100 அல்லது ரூ.200க்கான காசோலைகளை இழப்பீடாகத் தருவது நகைப்புக்குரிய ஒன்றா, இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.