

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என்று நீதிமன்றத்தில் சிபிஐ குற்றம் சாட்டியது.
தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உட்பட 14 பேர் மீதும், 3 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிபிஐ தரப்பில் வாதங்கள் முடிவடைந்தன. இறுதி வாதம் நேற்று தொடங்கியது. அப்போது நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜரானார்கள்.
சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிடும் போது, ‘‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கொள்கை முடிவு எடுப்பதில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை, அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தவறாக வழி நடத்தி உள்ளார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று ராசா கூறியுள்ளார்.
அத்துடன் 2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கான விண்ணப்ப காலக் கெடுவையும் குறைத்துள்ளார். திட்டமிட்டு சில நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டை வழங்கவே இப்படி செய்யப் பட்டுள்ளது’’என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் வாதிடுகையில், ‘‘தகுதியில்லாத ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட், யுனிடெக் வயர்லஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள் ளது. கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி மன்மோகன் சிங்குக்கு ராசா கடிதம் எழுதியுள்ளார். அதில் மன்மோகனை தவறாக வழி நடத்தியது தெரிகிறது’’ என்று கூறினார்.
இதையடுத்து இறுதிவாதத்தை முன்வைக்க குற்றம் சாட்டப் பட்டவர்கள் மற்றும் சிபிஐ தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணையை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததில், அரசுக்கு ரூ.30,984 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.