மத்திய அரசால் இணைய சமவாய்ப்பில் பாதிப்பு ஏற்படாது: ஸ்டாலின் நம்பிக்கை

மத்திய அரசால் இணைய சமவாய்ப்பில் பாதிப்பு ஏற்படாது: ஸ்டாலின் நம்பிக்கை
Updated on
1 min read

இணைய சம வாய்ப்பை எந்த விதத்திலும் பாதிக்காமல், மக்கள் தங்கு தடையற்ற இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில்,'' இணையத்தை தடையில்லாமல் பயன்படுத்துவது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெருவாரியான மக்கள் ட்ராய் அமைப்பிற்கு முறையிட்டுள்ளார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது பத்து லட்சம் இ-மெயில்கள் ட்ராய் அமைப்புக்கு வந்திருக்கிறது என்று தகவல். இந்நிலையில் இணைய சமவாய்ப்பு பற்றி விவாதிக்க தற்போது தொலை தொடர்புத்துறையும் பல்நோக்கு ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பொது நலன் சார்ந்து மக்களும், சமூக ஆர்வலர்களும் முன் வைத்த கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே இதை கருதுகிறேன்.

இந்த விஷயத்தில் அரசும், தனியார் கம்பெனிகளும் அர்த்தமுள்ள வகையில் இணைந்து பயணிக்க ஒரு வழிகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் இணையம் முக்கியப் பங்காற்ற வேண்டும். அந்த நோக்கில், பொருளாதாரப் பயன்களைப் பெறவும், அறிவை பெருக்கிக் கொள்ளவும் முதல் முறையாக இணையம் என்ற மேடை மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இந்த இணைய சேவையை கிராமப்புறங்கள் அனைத்திற்கும் எடுத்துச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க இவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள ஜனநாயக நாடுகள் பல இணையத்தின் அருமையை உணர்ந்து, அதைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவைகளை எப்படி வழங்குவது என்பதில் புதுப் புது முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

ஆகவே, கல்வியிலிருந்து பொறுப்புள்ள நிர்வாகம் வழங்குவது வரை, மக்கள் தங்களுக்கு வேண்டிய சேவையைப் பெறுவதற்கு இணையத்தை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

இணையம் ஏதோ மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல- அனைவருக்கும் சொந்தமானது. பல்வேறு உரிமைகள் போல் இணையமும் மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்.

இப்போது மத்திய அரசு அமைத்திருக்கும் பல்நோக்கு ஆலோசனைக் குழுவின் முடிவிற்காக காத்திருக்கும் அதே நேரத்தில், இணைய சமவாய்ப்பை எந்த விதத்திலும் பாதிக்காமல், மக்கள் தங்கு தடையற்ற இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in