Published : 28 May 2014 08:16 AM
Last Updated : 28 May 2014 08:16 AM

சவாலான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது: சோனியா

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடைப்பிடித்த மதச்சார்பின்மை, சோஷலிச பொருளாதாரம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கைவைத்துள்ளோம். நேருவின் இந்த மதிப்பீடுகளுக்கு சிலரால் சவால் விடக்கூடிய வகையிலான அரசியல் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

ஜவாஹர்லால் நேருவின் 50-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியின் சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், காங்கிரஸ் சார்பில் நேரு நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சோனியா காந்தி பேசியதாவது: “ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மதச்சார்பின்மை, சோஷலிச பொருளாதாரம், அணி சேரா வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை இந்தியத்தன்மையாக நேரு கொண்டு வந்தார்.

அந்த இந்தியத்தன்மையின் அடிப்படையையே சிலர் அசைத்துப் பார்க்கும் வகையில், சவாலான அரசியல் சூழல் இப்போது நிலவுகிறது.

முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது, மீதமுள்ள இந்தியப் பகுதிகளை இந்துக்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு ஏற்கவில்லை. அவர் இந்தியாவை பல்வேறு மதம், ஜாதி, இனம், மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் நாடாகத்தான் கருதினார். அவரின் இந்த கருத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதியுடன் இருக்கும். சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரும்பான்மை மதத்தினருக்கு இருக்கிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் நேரு செயல்பட்டார்.

நேருவின் சோஷலிசக் கொள்கை ஊழல் நிறைந்தது, திறன் அற்றது என்று இப்போது விமர்சிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூட, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சோஷலிசத்தில் குறை இருப்பதாகக் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த தனியார்துறையினரை ஊக்குவிப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. அதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தோம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தினோம்” என்றார் சோனியா காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x