

ஜாமீன் பெற ரூ.10,000 பிணைத் தொகை செலுத்த அர்விந்த் கேஜ்ரிவால் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அவரை உடனே திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10,000 பிணைத் தொகை செலுத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி, டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோமதி உத்தரவிட்டார். ஜூன் 6-ஆம் தேதி வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கேஜ்ரிவாலின் வழக்கறிஞர் ரோகித் குமார் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் கைலாஷ் கம்பீர், சுனிதா குப்தா அடங்கிய அமர்வு முன் இம்மனு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. கேஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகினர்.
‘காவலில் உள்ள ஒருவர்தான் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற வேண்டும். வழக்கறிஞருடன் ஆஜராகும் ஒருவர் பிணைத் தொகை செலுத்த வேண்டியதில்லை. அவரை காவலில் வைத்தது சட்ட விரோதம். மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி தவறு,’ என்று அவர்கள் வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டனர். `பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெறுவது சட்ட நடைமுறை. ஒருவர் சட்ட விரோத காவலில் இருந்தால், அவரை சட்டப்பூர்வ காவலுக்கு கொண்டு வருவதற்காக தொடரப்படுவதுதான் ஆட் கொணர்வு மனு. மாஜிஸ்திரேட் சட்டப்பூர்வமாக பிறப்பித்த உத்தரவின்படி காவலில் உள்ள ஒருவரை ஆஜர்படுத்த இம்மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்?
கேஜ்ரிவால் சட்டப்பூர்வ நடைமுறையை எதிர்த்து எத்தகைய கேள்வியையும் எழுப்பலாம். அதுபற்றி வழக்கு தொடரலாம். அதற்கு முன் சிறையில் இருந்து வெளியில் வந்து சட்டத்துக்கு எதிராக அவர் கேள்வி எழுப்பலாம். இதை அவர் கவுரவப் பிரச்னையாக கருதக் கூடாது,’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கேஜ்ரிவாலிடம் ஆலோசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் கேட்டுக் கொண்டதை அடுத்து, வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் திகார் சிறையில் கேஜ்ரிவாலிடம் ஆலோசனை நடத்திய பின், பிணைத் தொகை ரூ.10,000 செலுத்தி ஜாமீன் பெற அவர் சம்மதம் தெரிவித்தார். இந்த தகவல் நீதிமன்றத்தில் பிற்பகல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கேஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து உடனே விடுவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கேஜ்ரிவால் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள சட்டப் பிரச்சினை குறித்து டெல்லி அரசும், நிதின் கட்கரியும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.