காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது

Published on

பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் (இன்று) வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட ஹூரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் டிராள் பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் ராணுவ துப்பாக்கிச் சூட்டில் பலியானதைக் கண்டித்து இன்று நடைபெறவிருந்த பேரணியில் கிலானியும் ஆலமும் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்நிலையில், பதற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்துக்கு மாற்றம்:

பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் மட்டும் ஷாஹீத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து திடீரென காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வழக்கு:

முன்னதாக, கிலானி, மஸ்ரத் ஆலம், பீர் சைபுல்லா ஆகியோர் மீது போலீஸார் நேற்று மாலை வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) நடந்த பேரணியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதற்காக கிலானி, மஸ்ரத் ஆலம், பீர் சைபுல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பேரணியில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் மஸ்ரத் ஆலம், கிலானி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிலானிக்கு வரவேற்பு:

டெல்லியில் சில மாதங்களாக தங்கியிருந்த கிலானி அங்கிருந்து அண்மையில் ஸ்ரீநகருக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அவர் பேரணியாக அழைத்துச்செல்லப்பட்டார். பாகிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் கடந்த மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் கிலானி பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜ்நாத் கண்டனம்:

பேரணியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக மாநில முதல்வர் முப்தி முகமது சையதுவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் (நேற்று) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது பேரணியில் நடந்த விவகாரங்களை முதல்வர் முப்தி விவரித்தார். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in