

ஆம் ஆத்மியில் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், ஆனந்த் குமார், அஜித் ஜா, தரம்வீர் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. பிரசாந்த் பூஷணின் தந்தையும் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான சாந்தி பூஷண், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.
எனினும் டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் விலக வேண்டும் என்று பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் இறுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதில் எடுத்த முடிவின்படி, கட்சியின் செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், ஆனந்த் குமார், அஜித் ஜா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்கள் வகித்து வந்த உயர் பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும் நான்கு பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களில் அஜித் ஜா தவிர மற்ற 3 பேரும் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பினர். இந்த கடிதங்களை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தது. அதிருப்தி தலைவர்களின் பதில் திருப்தி அளிக்காததால் 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த தகவலை கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபக் பாஜ்பாய் நிருபர்களிடம் அறிவித்தார்.
இதனிடையே யாதவ், பூஷணுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தரம்வீர் காந்தி நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து யோகேந்திர யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சித் தலைமையின் ஏதேச்சதிகார நடவடிக்கையால் நாங்கள் நீக்கப்பட்டுள்ளோம். மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஆம் ஆத்மிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. கட்சியில் ஜனநாயகம் இல்லை.எனக்கு அரசியல் வெறுத்துவிட்டது. அதற்காக புதிதாக கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. என்றாவது ஒருநாள் உண்மை ஜெயிக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.