

மத்தியப் பிரதேச மாநிலத்தில், பொது வகுப்புக்கான டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஓடும் ரயிலில் ஏ.சி.கோச்சில் ஏற முயன்ற பெண் ஒருவரை குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளியதில் அந்தப் பெண் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ்ன் மாவட்டத்தில், உஜ்வாலா பாண்டே எனும் பெண் தனது 10 வயது மகளுடன் ராஜேந்திர நகர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி.கோச்சில் ஏற முற்பட்டார்.
அவரிடம் சாதாரண வகுப்புக்கான டிக்கெட் இருந்ததால் ஏ.சி.கோச்சில் ஏறுவதைத் தடுத்து நிறுத்தினார் டிக்கெட் பரிசோதகர் சம்பத் சலுங்கே. எங்கே ரயிலைத் தவறவிட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தன் 10 வயது மகளுடன் மீண்டும் ரயிலில் ஏற முயன்றார் உஜ்வாலா. அப்போது டிக்கெட் பரிசோதகர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.
டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில் தடுமாறிய உஜ்வாலா, ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் கீழே விழுந்து, ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ரயிலிலிருந்த கழிவறையில் சலுங்கே ஒளிந்து கொள்ள முயன்றார். ஆனால் கோபமடைந்த மக்கள், சலுங்கேவைப் பிடித்து இழுத்து, கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது