Published : 04 May 2014 02:25 PM
Last Updated : 04 May 2014 02:25 PM

மகாராஷ்டிரத்தில் ரயில் தடம் புரண்டு 19 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கொங்கண் ரயில் பாதையில், பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், நாகோதானே ரோகா ரயில் நிலையங்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.

திவா சவந்தவாடி இடையிலான இந்த பயணிகள் ரயில் 20 பெட்டிகள் கொண்டது. இந்த ரயிலின் இன்ஜின் மற்றும் 4 பெட்டிகள், நிடி என்ற கிராமத்துக்கு அருகில் குகைப் பாதைக்கு சற்று முன்பாக தடம் புரண்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர், இடிபாடு களில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 19 பேர் இறந்ததாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் டெல்லியில் ரயில்வே செய்தித் தொடர்பாளர், 13 பேர் இறந்ததாக தெரிவித்தார்.

காயமடைந்த பயணிகள் ரோகா மற்றும் நாகோதானே அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து கொங்கண் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் சரக்கு ரயில் ஒன்று இம்மாநிலத்தில், கொங்கண் பாதையில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 லட்சம் இழப்பீடு

இதனிடையே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந் தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சேத்தன் பக்சி விசாரணை நடத்துவார் என்றும் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் கூறினார். அருணேந்திர குமாரும் தனது ஆலோசகர் (சுகாதாரம்) பி.பி. அகர்வாலுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக உறவினர்கள் தகவல் பெறுவதற்கு ரயில்வே சார்பில் 022-25334840, 022-27561721/3/4 உள்ளிட்ட ஹெல்ப் லைன்கள் தொடங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x