

ஓங்கோல் மாடுகளுக்கு பிரேசிலில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் தங்கள் நாடுகளில் உற்பத்தி செய்வதற்காக இவ்வகை மாடுகளின் விந்தணுக்களை வாங்க அனுமதி கோரி சென்னையில் உள்ள தேசிய பல்லுயிரி ஆணையத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த ஓங்கோல் காளை மற்றும் பசுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வகை மாடுகள் பிரகாசம், குண்டூர், அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இப்போது சுமார் 1 லட்சம் மாடுகள் மட்டுமே இப்பகுதியில் உள்ளன.
சுமார் 350 முதல் 420 கிலோ எடை வரை உள்ள இவை எப்படிப்பட்ட தட்பவெப்ப சூழலிலும் வாழும் தன்மையுடையவை. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இவை மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இந்த இனத்தில் உள்ள பசு மாடுகள் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லிட்டர் வரை பால் கறக்கும்.
தினமும் இவைகளுக்கு மாட்டுத் தீவனம் உட்பட, குளுக்கோஸ், வாழைப்பழம் போன்றவையும் தீனியாக வழங்கப்படுகிறது. இதனால் இவற்றைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 வரை செலவாகிறது என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், சாதாரண விவசாயிகளால் இதை வளர்க்க இயலவில்லை.
இதுகுறித்து தேசிய பல்லுயிரி ஆணைய குழு செயலாளர் டி. ரபி குமார் கூறியதாவது:
இந்த வகை மாடுகளை பிரேசில் நாட்டவர்கள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றனர். ஆந்திர விவசாயிகள் இந்த வகை மாடுகளை பிரேசில் நாட்டவர்களுக்கு ஒரு மாடு ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்கின்றனர்.
இந்தியாவிலிருந்த இறக்குமதி செய்யும் இந்த வகை மாடுகளை வெளிநாட்டு சந்தைகளில் மேலும் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதற்காக இந்தியாவிலிருந்து விந்தணுக்களை வாங்கிச் சென்று தங்கள் நாட்டிலேயே இந்த வகை மாடுகளை உற்பத்தி செய்கின்றனர். பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இப்போது சுமார் 1 கோடிக்கும் மேல் இந்த வகை மாடுகள் உள்ளன.
இந்நிலையில், தேசிய பல்லுயிரி சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஓங்கோல் வகை மாடுகளின் விந்தணுக்களை இந்தியாவிலிருந்து வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வகை மாடுகளின் 5,000 யூனிட் விந்தணுக்களை வாங்க அனுமதி கோரி சென்னையில் உள்ள தேசியபல்லுயிரி ஆணையத்தில் பிரேசில் நாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தற்போது ஆணையத்தால் நியமிக்கப் பட்ட குழு பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் இந்த வகை மாடுகளை அவர்கள் உருவாக்கி அவைகளை வெளிநாடுகளுக்கு விற்க உள்ளனர். இதில் குறிப்பாக உயர் இனமான பிராம்மன வகை மாடுகளின் விந்தணு ஒரு யூனிட் 5,000 டாலர்களுக்கு வாங்க இவர்கள் தயாராக உள்ளனர்.
மெக்ஸிக்கோ, பிரேசில் போன்ற நாடுகளில் தற்போது பிராம்மன வகை மாடுகள் ஒரு கோடிக்கும் மேல் உள்ளன. இவ்வாறு ரபி குமார் தெரிவித்தார்.