

பிஹாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தான் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாஞ்சி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் 'ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா' எனும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். வருகிற 20ம் தேதி பாட்னாவில் மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த உள்ளோம். அங்கு மக்களின் வரவேற்பைப் பொறுத்து வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன்.
நிதிஷ், லாலு பிரசாத் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகிய மூவரும் சந்தர்ப்ப வாதிகள்.இவ்வாறு அவர் கூறினார்.