

டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த ஊக்கமே ராஜஸ்தான் விவசாயி கஜேந்திரா சிங்கின் தற்கொலைக்கு காரணம் எனக் குறிப்பிட்டு டெல்லி போலீஸார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால், அக் கட்சியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மக்களவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு எதிரானதாக புகார் எழுந்தது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் அம் மாநிலத்தை ஆளும் முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஏறிய ராஜஸ்தானின் தவுசாவை சேர்ந்த 40 வயதான விவசாயி கஜேந்திரா சிங் தற்கொலை செய்து கொண்டார். இதன் மீது டெல்லியின் குற்றவியல் பிரிவின் போலீஸார் கஜேந்திராவின் சாவு மர்மமானது எனப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் விசாரணை மீதான தகவல் கொண்ட ஒரு கடிதம் டெல்லி போலீஸாரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ’மரத்தில் ஏறிய கஜேந்திராவிற்கு அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் கைதட்டி, ஆர்ப்பரித்து ஊக்கம் அளித்துள்ளனர். இதை செய்ய வேண்டாம் என அங்கு காவலுக்கு இருந்த போலீஸார் அக்கட்சியினரிடம் கேட்டுக் கொண்டதை அக் கட்சியினர் மற்றும் அதன் தலைவர்கள் யாருமே பொருட்படுத்தவில்லை.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட போது அந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்காவது மாற்றிக் கொள்ளும்படி போலீஸார் கூறிய யோசனையையும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் புகாராக கூறப்பட்டுள்ளது. முன்பின் பழக்கம் இல்லாத கட்சியினர் மரத்தில் ஏறி அவரை காப்பற்ற முயன்றதும் கஜேந்திரா கீழே விழுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் கஜேந்திரா வழக்கை விசாரித்து வரும் குழுவின் வட்டாரம் கூறுகையில், ‘இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கஜேந்திரா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் உள்ள எழுத்துக்கள் கஜேந்திராவின் கையெழுத்துடன் ஒத்து போகவில்லை என்பதால் அது, தடயவியல் ஆய்வகத்தின் இறுதி அறிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கஜேந்திரா, தனது இறுதி நாள் அன்று தன் குடும்பத்தாருடன் தொடர்ந்து கைப்பேசியில் பேசி வந்ததாகவும், மரம் ஏறுவதற்கு முன்பாக தன் மனைவியிடம் தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கும்படியும் கூறியதாகவும் பார்த்தவர்கள் அளித்த சாட்சியங்களையும் கவனமாக விசாரித்து வருகிறோம்.’ எனத் தெரிவித்தனர்.
கஜேந்திராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஐபிசி 306 மற்றும் அரசு ஊழியர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ஐபிசி 186 ஆகிய பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியினர் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.